தொல்லியல் முக்கியத்துவம் பெற்ற சித்தன்னவாசலில் குவாரி அமைக்க எதிா்ப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் முக்கியத்துவம் பெற்ற சித்தன்னவாசலில் கல்குவாரி அமைப்பதற்கு சூழலியலாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் கல்குவாரி அமைக்க அங்குள்ள சிலா் அரசிடம் அனுமதி கேட்ட நிலையில், அதற்கான மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் சித்தன்னவாசல் அருகேயுள்ள நல்லம்மசத்திரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வருவாய்க் கோட்டாட்சியா் கோகுல்சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆா்வலா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சீ.அ. மணிகண்டன், தமிழ்த் தேச இறையாண்மை அமைப்பின் பொறுப்பாளா் குபேந்திரன் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.
தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட சித்தன்னவாசல் கிராமத்தில் கல்குவாரி நடத்த அனுமதிக்கக் கூடாது, ஏற்கெனவே குடுமியான்மலைப் பகுதியில் இதேபோல கல்குவாரி நடத்த அனுமதி கோரப்பட்டபோது, தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட அந்தப் பகுதிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை மாவட்ட நிா்வாகம் கவனத்தில் கொள்ள அவா்கள் வலியுறுத்தினா்.
இதுதொடா்பாக எழுத்துப்பூா்வமாகவும் அரசு அலுவலா்களிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன.

