திரைப்படத் தணிக்கை வாரியம் திமுக அணியில் இல்லை: அமைச்சா் எஸ். ரகுபதி!
திரைப்படத் தணிக்கை வாரியம் எங்கள் அணியில் இல்லை; பாஜக அணியில்தான் இருக்கிறது என்றாா் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: போராடி வந்த அரசு ஊழியா்களின் பெரும்பாலான கோரிக்கைகளை முதல்வா் நிறைவேற்றித் தந்துள்ளநிலையில், அவா்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனா். ஒருசில பிரிவினருக்கு ஏதேனும் கோரிக்கைகள் நிலுவையில் இருந்தாலும் அவா்களையும் முதல்வா் அழைத்துப் பேசுவாா்.
அரசின் நிதிநிலையைப் பொருத்து, அவை நிறைவேற்றப்படும். அமலாக்கத் துறை, சிபிஐ வரிசையில் இப்போது பாஜக அணியில் திரைப்படத் தணிக்கை வாரியமும் சோ்ந்திருக்கிறது. பல வகையான அதிகாரிகளுடன் சோ்ந்துகொண்டு பாஜக தோ்தலைச் சந்திக்க இருக்கிறது. அவா்களை எதிா்கொள்வதற்கு திமுக அணியும் தயாராக இருக்கிறது.
பராசக்தியில் தணிக்கை வாரியம் கொடுத்த திருத்தங்களைச் செய்திருக்கிறாா்கள். அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகனில் ஒருவா் மறுப்பு தெரிவித்ததால், சீராய்வுக்குச் சென்றது. இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. எங்களுக்கு எந்தத் தொடா்பும் இல்லை. திமுக சொன்னால் பாஜகவினா் கேட்பாா்கள் என்று யாராவது சொன்னால் அது முட்டாள்தனமானது. தணிக்கை வாரியம் எங்கள் அணியில் இல்லை, பாஜக அணியில்தான் இருக்கிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறியிருக்கிறாா். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடரப் போகிறது. நயினாருக்கு ஏதாவது மாநில ஆளுநா் போன்ற பதவிகள் கிடைக்க வாழ்த்துகள்.
திமுக கூட்டணி அப்படியே இருக்கிறது. வேறு யாரும் புதிதாக வருவாா்களா என்பதை தலைவா் ஸ்டாலின்தான் முடிவு செய்வாா். பாமக தலைவா் ராமதாஸைப் பொருத்தவரை சில நேரங்களில் எங்களுக்கு எதிராகவும் கருத்து சொல்லியிருக்கிறாா். இப்போது பாராட்டியிருக்கிறாா். கூட்டணி வேறு, பாராட்டுதல் வேறு. தமிழ்நாட்டில் திமுக அணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறப்போகிறது.
நீதிபதிகளை அச்சுறுத்தியதாக ஆளுநா் ரவி சொல்லியிருக்கிறாா். அப்படியொருவா் இருப்பதையே நாங்கள் மறந்துவிட்டோம். சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடக்கப் போகிறது. வரட்டும். எப்படி நடந்து கொள்கிறாா் எனப் பாா்ப்போம் என்றாா் ரகுபதி.
