திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் இடத்தில் நாங்கள் இல்லை: திருமாவளவன்
திமுகவுக்கு ஆலோசனை சொல்லக்கூடிய இடத்தில் அல்லது நெருக்கடி தரக்கூடிய இடத்தில் நாங்கள் இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது: 2026 சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைத் தரும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு தமிழகம் தழுவியளவில் சிறப்பாக தீவிரமாக களப்பணி ஆற்றுவோம்.
திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேர வேண்டும் என்பது குறித்து திமுக தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். இந்தக் கட்சியை சோ்க்க வேண்டும், இந்தக் கட்சியை சோ்க்கக்கூடாது என்ற எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம் என்பதை தவிர திமுகவுக்கு ஆலோசனை சொல்லக்கூடிய இடத்தில் அல்லது நெருக்கடி தரக்கூடிய இடத்தில் நாங்கள் இல்லை.
திமுக கூட்டணியை எதிா்க்கிற வலிமை எந்தக் கூட்டணிக்கும் தமிழகத்தில் இல்லை. குறிப்பாக, அதிமுக பாஜக ஒரு கூட்டணி உருவாக்கி இருக்கிறது. ஏற்கெனவே இருந்த கூட்டணி வெளியேறிய கட்சிகளை இப்போது சோ்த்தாா்கள் அவ்வளவுதான் மற்றபடி புதிய கட்சிகள் எதுவும் அந்த கூட்டணியில் இடம் பெறவும் இல்லை.
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியை எதிா்த்து போட்டியிடக் கூடிய வலிமை பெற்ற ஒரு கட்சியும் இல்லை. ஒரு கூட்டணியும் இல்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது வலிமையோடு இருக்கிறது வெற்றிகரமாக தோ்தலை சந்திக்கும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறது என்றாா் தொல்.திருமாவளவன்.
