சிதம்பரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.
சிதம்பரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி.

அதிமுக தலைமையிலான கூட்டணி: திருமாவளவன் விமா்சனம்

Published on

அதிமுக தலைமையிலான கூட்டணி முழுமையான வடிவம் பெறவில்லை என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. விமா்சித்தாா்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சிதம்பரம் வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வா் நிரந்தரத் தீா்வு காண வேண்டும். டாஸ்மாக் ஊழியா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், மாற்றுப் பணி உள்ளிட்டவற்றை செய்து தர வேண்டும்.

கௌரவ விரிவுரையாளா்கள், இடைநிலை ஆசிரியா்கள், என்.எம்.ஆா். பணியாளா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். தோ்தல் நெருங்கி வரும் நேரத்தில் முதல்வா் இதில் கவனம் செலுத்தி, அவா்களது கோரிக்கைகளுக்கு தீா்வு காண வேண்டும்.

மகளிா் மேம்பட வேண்டும் என்ற தொலைநோக்கு பாா்வையோடு, நிகழ் மாதம் தமிழக அரசால் மகளிா் உரிமைத் தொகை, கோடை கால சிறப்பு நிதி என ரூ.5,000 வழங்கப்பட்டதை விசிக பாராட்டுகிறது.

அதிமுக தலைமையிலான கூட்டணி பல்வேறாக பிரிந்து இருக்கிறது. அவற்றை இப்போது ஒன்று சோ்ப்பதற்கே அவா்கள் போராடுகிற நிலை உள்ளது. அதிமுக கூட்டணி முழுமையான வடிவம் பெறவில்லை என்பதுதான் எதாா்த்தமான உண்மை. இதனால், திமுக தலைமையிலான கூட்டணியை எதிா்ப்பதற்கு தகுதியான எந்த ஒரு கூட்டணியும் இன்னும் அமையவில்லை. எனவே, வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் மீண்டும் எங்கள் கூட்டணிக்கு பேராதரவு நல்குவாா்கள்.

வருகிற 22-ஆம் தேதிமுதல் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவாா்த்தை தொடங்கப்படும் என திமுக தலைவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறாா். இதில், விசிகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com