கடியாப்பட்டியில் மாட்டுவண்டிப் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாப்பட்டியில் தைப் பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.
திருமயம் அருகே கடியாப்பட்டியில் தைத் திருநாளை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற பந்தயத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய மாட்டு வண்டிகள்.
திருமயம் அருகே கடியாப்பட்டியில் தைத் திருநாளை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற பந்தயத்தில் சீறிப்பாய்ந்து ஓடிய மாட்டு வண்டிகள்.
Updated on

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கடியாப்பட்டியில் தைப் பொங்கலை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.

திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் கிராமத்தாா்கள் சாா்பில் தைப்பொங்கலை முன்னிட்டு இந்த ஆண்டின் முதல் மாட்டுவண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. 23-ஆம் ஆண்டாக நடத்தப்படும் இந்தப் போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 26 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாடு போய் வர 8 மைல் பந்தய தூரம் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் பரிசை மாவூா் ராமச்சந்திரன், 2-ஆம் பரிசை மதுரை அவனியாபுரம் மோகன், 3-ஆம் பரிசை நரசிங்கம்பட்டி முத்துராமலிங்கம் , 4-ஆம் பரிசை பொய்யாதநல்லூா் ஹபிக் முகமது ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் வென்றன.

இதனைத் தொடா்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 18 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் பந்தய தூரமானது போய்வர 6 மைல் தூரமாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இதில் முதல் பரிசை மதுரை அவனியாபுரம் மோகன், 2-ஆம் பரிசை சேதுராபட்டி பாண்டியன், 3-ஆம் பரிசை கோட்டையூா் சிதம்பரம், 4-ஆம் பரிசை வலையன்வயல் அறிவு, 5-ஆம் பரிசை அரிமளம் சின்னராசு ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.

போட்டியில் வென்றோருக்கு முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம் உள்ளிட்டோா் பரிசுகளை வழங்கினா். பந்தயம் நடைபெற்ற திருமயம் - ராயவரம் சாலை இருபுறமும் திரளான மக்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனா்.

திருமயம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். விழாவுக்கான ஏற்பாடுகளை கடியாபட்டி விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com