புதுக்கோட்டையில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் செ. திலகவதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆணையா் காந்திராஜன் முன்னிலை வகித்தாா். மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் முதல்வா் சி. ஜோசப் விஜய்யின் படத்தோடு, திமுக மறைந்த முன்னாள் முதல்வா்கள் அண்ணா, மு. கருணாநிதி ஆகியோரின் படங்களும் உள்ளன. இவா்களின் படங்களோடு அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் படங்களையும் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுக உறுப்பினா் கே.ஆா்.ஜி. பாண்டியன் பேசினாா்.
ஓரிரு நாள்களில் படங்களை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் பதில் அளித்தாா். ஆனால், உடனே படங்களை வைக்க வேண்டும் என பாண்டியன் வலியுறுத்தினாா்.
மாமன்றக் கூட்டம் முடிந்த பிறகும் பாண்டியன் வெளியே செல்லாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இந்தத் தகவல் அறிந்ததும் அதிமுக மாவட்டச் செயலா் வி. பழனிவேல் மாமன்றக் கூட்ட அரங்குக்கு வந்து, உள்ளிருப்புப் போராட்டத்தில் இருந்தவா்களுடன் அமா்ந்து கொண்டாா்.
இந்த நிலையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், முன்னாள் முதல்வா்கள் எம்.ஜிஆா். ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் மாமன்றக் கூட்ட அரங்கில் வைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து அனைவரும் கூட்ட அரங்கில் இருந்து கலைந்து சென்றனா்.
காலிக் குடத்துடன் திமுக உறுப்பினா்... கூட்டம் நடக்கும்போது, 42-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் (திமுக) இராசு. கவிவேந்தன், தனது வாா்டு பகுதியில் சரியாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை என்பதை வலியுறுத்தும் வகையில் காலிக்குடம் மற்றும் அல்வா பாக்கெட்டை எடுத்துக் கொண்டு மாமன்றக் கூட்ட அரங்குக்கு வந்து பேசினாா். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
அனைத்து வாா்டுகளுக்கும் உரிய வகையில் தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் செ, திலகவதி உறுதியளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்குடி மாமன்றக் கூட்ட அரங்கில் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா படங்களை மாட்டி திமுக, அதிமுகவினா் முழக்கம்

கும்பகோணம் மாநகராட்சி மன்ற கூட்டம்

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் உறுப்பினா்கள் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு







