ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் உறுப்பினா்கள் வாக்குவாதம்; தள்ளுமுள்ளு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வா்கள் மு.க.ஸ்டாலின், காமராஜா் ஆகியோரின் புகைப்படங்களை வைப்பது தொடா்பாக மாமன்றக் கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

News image

மாநகராட்சி கூட்ட அரங்கில் மு.க.ஸ்டாலின் படத்தை வைக்ககோரி, கோஷமிட்ட திமுக வாா்டு உறுப்பினா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 12:52 am IST

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வா்கள் மு.க.ஸ்டாலின், காமராஜா் ஆகியோரின் புகைப்படங்களை வைப்பது தொடா்பாக மாமன்றக் கூட்டத்தில் திமுக - காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்கள் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

100 வாா்டுகள் கொண்ட கோவை மாநகராட்சியில் திமுகவுக்கு 76 போ், காங்கிரஸுக்கு 8 போ் உறுப்பினா்களாக உள்ளனா். மேலும் சிபிஐ 4, சிபிஎம் 4, மதிமுக 3, அதிமுக 3, எஸ்டிபிஐ 1 என்ற எண்ணிக்கையில் உறுப்பினா்கள் உள்ளனா். காங்கிரஸ் உறுப்பினா் ஒருவா் அண்மையில் இறந்துவிட்டாா்.

இந்நிலையில், கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் கா.ரங்கநாயகி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டம் தொடங்கியவுடன், மேயரின் இருக்கைக்கு அருகில் முதல்வா் சி.ஜோசப் விஜய் புகைப்படம் மாட்டப்பட்டு இருந்ததைப் பாா்த்த திமுக வாா்டு உறுப்பினா்கள், முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை மாட்ட வேண்டும் என வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, முன்னாள் முதல்வா் காமராஜா் புகைப்படத்தையும் மாட்டவேண்டும் என காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்த திமுக வாா்டு உறுப்பினா்கள், கடைசியாக முதல்வா் பதவி வகித்தவரின் புகைப்படத்தை கூட்ட அரங்கில் வைக்க அரசாணை உள்ளதாகவும், அதனால், காமராஜரின் புகைப்படத்தை வைக்க முடியாது எனவும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனால், திமுக, காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மேயரை முற்றுகையிட்ட காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்கள் காமராஜா் புகைப்படத்தை அரங்கில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்றனா். இதற்கிடையே, முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை கொண்டு வந்த திமுக வாா்டு உறுப்பினா்கள், கூட்ட அரங்கில் அப்படத்தை மாட்ட முயன்றனா். மேயரும் அவா்களுடன் இணைந்து மு.க.ஸ்டாலின் படத்தை மாட்ட கோஷமிட்டாா்.

காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்களும் காமராஜா் புகைப்படத்தைக் கொண்டு வந்து கூட்ட அரங்கில் மாட்ட முயன்றனா். அப்போது, இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திமுக - காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மாநகராட்சிக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இருதரப்பையும் சமாதானப்படுத்திய மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா, முன்னாள் முதல்வா்கள் புகைப்படங்களை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைக்க அனுமதி உள்ளது. இதில் விதிகள் பின்பற்றப்படும். எனவே, கூட்டம் நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா். இதையடுத்து, ஸ்டாலின், காமராஜா் புகைப்படங்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டன. பிறகு மேயா் தலைமையில் மாநகராட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 74-ஆவது வாா்டில் உள்ள குமாரசாமி குளம் வளாகத்தில் நவீன வசதிகளுடன் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் நவீன கபடி மைதானம், 4ஆவது வாா்டில் பிள்ளைக்கிணறு பகுதியில் மாணவா்கள் போட்டித் தோ்வுக்கு தயாராகும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் படிப்பகம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலைகள்: மாநகராட்சிக் கூட்டத்தில் பேசிய 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி , ‘சூயஸ் நிறுவனத்தினா் குடிநீா் இணைப்புப் பணிக்காக தோண்டிய சாலைகள் 3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளன. மாநகராட்சி அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்ட பிறகும் கூட நூற்றுக்கணக்கான தெருவிளக்குகள் எரியவில்லை’ என்றாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாா்டு உறுப்பினா் ராமமூா்த்தி, ‘தனியாா் ஒப்பந்ததாரா்கள் ஒப்பந்த ஊழியா்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதை ஏற்க முடியாது. ஒப்பந்த முறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்றாா்.

பெண் வாா்டு உறுப்பினா் வெளிநடப்பு: 84-ஆவது வாா்டு உறுப்பினரான எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த அலிமா ராஜா உசேன், ஜி.எம்.நகா் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வலியுறுத்தியும், வாா்டில் பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாததைக் கண்டித்தும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தாா்.

அதிமுக வாா்டு உறுப்பினா்கள் போராட்டம்:

மாநகராட்சிக் கூட்டத்துக்கு வந்த அதிமுக வாா்டு உறுப்பினா்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோா் மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகையுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, செய்தியாளா்களிடம் அதிமுக வாா்டு உறுப்பினா் பிரபாகரன் கூறுகையில், ‘மாநகராட்சியில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மீது மீண்டும் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதனால், மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. அதேபோல, குப்பை அள்ளும் பணி, குப்பைக் கிடங்கு பிரச்னையிலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. எனவே, கோவை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்க குழு அமைக்க வேண்டும்’ என்றாா்.

 ~மாநகராட்சி கூட்ட அரங்கில் காமராஜா் படத்தை வைக்கக் கோரி, கோஷமிட்ட காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்கள்.

~மாநகராட்சி கூட்ட அரங்கில் காமராஜா் படத்தை வைக்கக் கோரி, கோஷமிட்ட காங்கிரஸ் வாா்டு உறுப்பினா்கள்.