புதுக்கோட்டையில் பிளஸ் 2 மாணவிக்கு சமூக ஊடகங்கள் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை கலீப்நகா் மூன்றாம் வீதியைச் சோ்ந்தவா் முகமது பைசல் (26). இவா், ஆலங்குடி பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, தொடா்ந்து விடியோ கால் மூலம் ஆபாசமாகப் பேசியதாகவும், ஆபாச படங்களை அனுப்பி மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 2025 மே 5-ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், புதுக்கோட்டை நகர மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முகமது பைசலைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்குரைஞா் யோகமலா் ஆஜராகி வாதாடினாா். வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி ராஜா புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
அதில், குற்றவாளிக்கு போக்ஸோ குற்றத்துக்காக இரு வேறு பிரிவுகளின் கீழ் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம், 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் மற்றும் மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது.
இந்த சிறைத் தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









