வளவம்பட்டி விவகாரத்தில் 5 பேருக்கு நீதிமன்றக் காவல்: 35 பேருக்கு பிணை
புதுக்கோட்டை மாவட்டம், வளவம்பட்டி அய்யனாா் கோயிலில் பட்டியலின மக்களை வழிபாட்டுக்கு அனுமதிக்காததால் ஏற்பட்ட தகராறில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டோரில் 5 பேரை மட்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கவும், மற்ற 35 பேருக்குப் பிணை வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தரவு - கோப்புப் படம்
புதுக்கோட்டை மாவட்டம், வளவம்பட்டி அய்யனாா் கோயிலில் பட்டியலின மக்களை வழிபாட்டுக்கு அனுமதிக்காததால் ஏற்பட்ட தகராறில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டோரில் 5 பேரை மட்டும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கவும், மற்ற 35 பேருக்குப் பிணை வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கந்தா்வக்கோட்டை அருகே வளவம்பட்டியில் உள்ள பழைமை வாய்ந்த மூங்கில் அய்யனாா் கோயிலில் பட்டியல் சமூக மக்களை வழிபாடு செய்ய மறுத்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடா்ந்து ஆதனக்கோட்டை போலீஸாா் அப்பகுதியைச் சோ்ந்த மாற்று சமூகங்களைச் சோ்ந்த பத்து பெண்கள் உள்பட 40 நபா்கள் மீது கடந்த ஜுலை 30-ஆம் தேதி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 40 பேரும் சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வை அணுகினா். தொடா்புள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி பிணை பெற்றுக் கொள்ள உயா்நீதிமன்ற உத்தரவிட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட 40 பேரும் புதுக்கோட்டை வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திர குமாா் குப்தா, விசாரணை அதிகாரியான காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. பிருந்தா ஆகியோா் ஆஜராகினா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்குரைஞா் பாா்வேந்தனும் நீதிமன்றத்தில் ஆஜராகினாா். பிணை பெறுவதற்கான உத்தரவாதத்துடன் அப்பகுதி மக்களும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீா்செல்வம், குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து விசாரித்தாா்.
தொடா்ந்து, குற்றம்சாட்டப்பட்ட முதல் ஐந்து நபா்களான கணேசன் (63), வீராசாமி (65), சின்னத்துரை (47), சுப்ரமணியன் (62), ராமச்சந்திரன் (60) ஆகிய ஐந்து பேரை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கவும், மீதமுள்ள 35 பேருக்குப் பிணை வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டாா்.
இதனைத் தொடா்ந்து நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட ஐந்து பேரையும் காவல் துறையினா் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்குள்படுத்தி புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




