பாலிடெக்னிக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவரை பணியமர்த்தினால் நவ. 23-இல் போராட்டம்

தமிழ்நாடு அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவரை  பணியமர்த்தும் தேர்வு முடிவைக் கைவிடாவிட்டால்,  சென்னையில் நவ. 23-ம்
Updated on
1 min read

தமிழ்நாடு அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் வெளி மாநிலத்தவரை  பணியமர்த்தும் தேர்வு முடிவைக் கைவிடாவிட்டால்,  சென்னையில் நவ. 23-ம் தேதி நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பைத் தடுத்தும் நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும் என்றார் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன்.
தஞ்சாவூரில் இப்பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் மணியரசன் புதன்கிழமை தெரிவித்தது:
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் தொடர்ந்து தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வெளி மாநிலத்தவரே பெரும்பான்மையாக வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில், இப்போது மாநில அரசுப் பணிகளிலும் வெளி மாநிலத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல் கடும் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்தில் உள்ள பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக் கல்லூரி) உள்ள 1,058 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வு முடிவுகள் நவ. 7-ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது. இதில், வெளி மாநிலத்தவர்கள் பெருமளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகப் பல்தொழில்நுட்பக் கல்லூரிப் பணித் தேர்வு பட்டியலில் இருந்து வெளி மாநில மாணவர்களை நீக்க வேண்டும். அவ்வாறு நீக்கிய பிறகு தமிழ்நாடு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நவ. 23-ஆம் தேதி சென்னை தரமணி மத்திய பல்தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பு நிகழ்வைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் விழுந்த ஓட்டைகள் மூலமாகத் தமிழக அரசின் முறைகேடு தெரிய வருகிறது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார் மணியரசன்.
அப்போது, பொதுச் செயலர் கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஆளுநரின் செயல் கண்டிக்கத்தக்கது
"கோவை, திருப்பூரில் தமிழக ஆளுநர் புரோகித் பன்வாரிலால் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதை தமிழ்த் தேசிய பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இப்போதுள்ள அரசமைப்புச் சட்டம் மாநில அமைச்சரவைக்கு முழுமையான அதிகாரம் தரவில்லை என்றாலும், அந்த அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி நிர்வாக நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கவில்லை.
ஆளுநரின் அதிகார ஆக்கிரமிப்பைத் தமிழக முதல்வர் கண்டிக்க வேண்டும். மேலும், பிரதமரும் தலையிட்டு ஆளுநரின் அதிகார அத்துமீறல்களைத் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கருப்புக் கொடி காட்டி திரும்பிப் போ என முழங்க வேண்டும்' என்றார் மணியரசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com