காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தஞ்சாவூர் ரயிலடியில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திமுக மாநகரச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம் தலைமை வகித்தார். திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் து. செல்வம், முன்னாள் நகர் மன்றத் தலைவர் சி. இறைவன், திராவிடர் கழகப் பொதுச் செயலர் இரா. ஜெயக்குமார், மண்டலத் தலைவர் அய்யனார், மாவட்டத் தலைவர் சி. அமர்சிங், விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டத் தலைவர் சொக்கா ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில் அஞ்சலகம் முற்றுகை: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கும்பகோணம் மகாமகக் குளக் கரையில் இருந்து தலைமை அஞ்சலகம் வரை நாம் தமிழர் கட்சியினர் புதன்கிழமை ஊர்வலமாகச் சென்றனர்.
மேலும், அஞ்சலகம் முன் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அப்போது, காவல் துறையினர் வைத்திருந்த தடுப்புகளைத் தாண்டி அலுவலகத்துக்குள் புகுந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி நகரச் செயலர் அசோக் தலைமையில், சட்டப்பேரவைத் தொகுதிச் செயலர் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், 4 பெண்கள் உள்பட 52 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிராம மக்கள் உண்ணாவிரதம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஒரத்தநாடு வட்டம், வடக்கூர் ஸ்டேட் பேங்க் எதிரில் கிராம மக்கள் சுமார் 100 பேர் புதன்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









