புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத்.
தஞ்சாவூர் ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
கஜா புயலால் ஏராளமான தென்னை மரங்கள் சேதமடைந்துவிட்டன. தென்னை விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். தேசிய நெடுஞ்சாலைக்காக நிலங்களை அரசு எடுக்கும்போது, தென்னை மரத்துக்கு ரூ. 50,000 வீதம் நிவாரணம் வழங்குகிறது.
ஆனால், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரத்துக்கு நிவாரணம் மிகவும் குறைவாக வழங்கப்படும் நிலையில், தென்னங்கன்றுக்காக அரசுப் பிடித்தம் செய்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும். இதுவும், இந்த மண்ணுக்கு ஏற்ற ரகங்களை மட்டுமே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்னங்கன்றுகள் வளர்ந்து வருவதற்கு நான்கைந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதுவரை மாற்றுப் பயிர் செய்வதற்கு விவசாயிகளுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். தமிழக அரசுக் கோரிய ரூ. 15 ஆயிரம் கோடி நிவாரணத்தை மத்திய அரசு வழங்குவதுடன், உடனடி நிவாரணமாக ரூ. 5,000 கோடியை வழங்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட வீடுகள், விளைநிலங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் அர்ஜூன் சம்பத். அப்போது, கட்சியின் இளைஞரணி பொதுச் செயலர் டி. குருமூர்த்தி, தெற்கு மாவட்டத் தலைவர் சன் சிவா உள்ளிட்டோர் தென்னங்கன்றுகளை கையில் ஏந்தி உடனிருந்தனர். பின்னர், இதுதொடர்பாக மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








