இறந்தவரின் சடலத்தை உடனே வழங்க வலியுறுத்தி உறவினர்கள் மறியல்

திருவையாறில் இறந்த முதியவரின் சடலத்தை உடனே வழங்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

திருவையாறில் இறந்த முதியவரின் சடலத்தை உடனே வழங்க வலியுறுத்தி அவரது உறவினர்கள் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை அருகே கொ. வல்லுண்டான்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (85). கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் கோபித்து கொண்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், திருவையாறு காவிரி படித்துறையில் கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி விஷம் அருந்தி இறந்துகிடந்துள்ளார்.
தகவலறிந்த திருவையாறு போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவர் யார் என்று விசாரித்து வந்தனர்.
இதுகுறித்து பிப். 3-ஆம் தேதி தகவலறிந்த கணேசனின் மகன் பழநி தனது இரு சகோதரர்களுடன், தந்தையின் சடலத்தைப் பெற தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர்கள், சடலத்தை ஞாயிற்றுக்கிழமை தருவதாகக் கூறியுள்ளனர்.  இதையடுத்து அவர்கள் தங்களது உறவினர்களுக்கு தகவல் அளித்து அடக்கத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர். ஆனால் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், சடலத்தை பிரேத பரிசோதனை செய்யாமல்,  திருவையாற்றில் கணேசன் இறந்த காரணத்தால் அங்குதான் பரிசோதனை செய்ய முடியும் கூறியுள்ளனர்.  இதனால் விரக்தியடைந்த கணேசனின் மகன்கள் மற்றும் உறவினர்கள் தஞ்சை அருகே நாஞ்சிக் கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. 
தகவலறிந்து அங்கு வந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கணேசனின் சடலத்தை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து வழங்குவதாக உறுதியளித்ததன்பேரில் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து,  கணேசனின் உடல் ஞாயிற்றுக்கிழமை இரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com