"துரோகம் இழைத்தவர்களை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்'

துரோகம் செய்தவர்களுக்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் என்றார் ஆர்.கே. நகர் எம்எல்ஏ டிடிவி. தினகரன்.
Updated on
1 min read

துரோகம் செய்தவர்களுக்கு தமிழக மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள் என்றார் ஆர்.கே. நகர் எம்எல்ஏ டிடிவி. தினகரன்.
தஞ்சாவூர் மாவட்டம்,  ஒரத்தநாடு வட்டம்,  மேலஉளுரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
மக்கள், விவசாயிகள் நலனுக்கு எதிரான எந்த திட்டத்தையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் அனுமதித்தது கிடையாது.  அவர் ஆட்சியில் தமிழகம் பாதுகாப்பாக இருந்தது. ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் இவர்கள்,  மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எப்படியெல்லாம் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் பாஜகவின் நிழல் அரசாங்கமாக இங்கு இவர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். 
2 முறை மாநில அமைச்சராகவும்,  மூன்று முறை எம்எல்ஏவுமாக இருந்த ஆர். வைத்திலிங்கம், 
தனது சொந்த தொகுதியில் அதுவும் அவரின் உறவினர்கள் உள்ள தொகுதியில் தோற்றதற்கு காரணம் அவர் செய்த துரோகம்தான் என்பது இந்தத் தொகுதி மக்களுக்கு நன்கு தெரியும்.
துரோகம் செய்தவர்களுக்கு தமிழக மக்கள்  இடம் கொடுக்க மாட்டார்கள். உண்மையான ஜெயலலிதாவின் ஆட்சி அமைய நீங்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். எங்கள் ஆட்சி அமைந்தால்,  காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்போம்.  டெல்டா பகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை தவிர மற்றவற்றை நுழைய விடமாட்டோம் என்றார். 
நிகழ்ச்சியில்,  தினகரன் அணியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் மா.சேகர், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேஸ்கண்ணன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com