நீலகண்டபுரம் ரயில்வே கேட் பிரச்னை: ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பேராவூரணியில் ரயில் பாதையை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Updated on
1 min read

பேராவூரணியில் ரயில் பாதையை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 காரைக்குடி- திருவாரூர் அகல ரயில்பாதை பணிகளுக்காக கடந்த 5 ஆண்டுகளாக காரைக்குடி-திருவாரூர் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. 
தற்போது காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளன. பேராவூரணியில் நீலகண்டபுரம் செல்லும் வழியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்டை நிரந்தரமாக தடுப்பு அமைத்து மூடிவிட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 
இந்த இடத்தை மூடினால் அந்தப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள், மருத்துவமனை, அரசு தொடக்கப் பள்ளி ஆகியவற்றிற்கு பொதுமக்கள் சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மேலும் இவ்வழியே 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் கூறி,  இந்த ரயில்வே கேட்டை (எண்- எல்.சி.121) மூடக்கூடாது என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வரும் 28ஆம் தேதியும் போராட்டம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ரயில்வே  உயரதிகாரிகள் புதன்கிழமை மாலை 7 மணியளவில் டிராலியில் அமர்ந்து ரயில்பாதை ஆய்வில் ஈடுபட்டனர். இதையறிந்த இப்பகுதியை சேர்ந்த 300 பெண்கள் உள்ளிட்ட 500 பேர் டிராலியை மறித்து,  அதிகாரிகளை முற்றுகையிட்டு, ரயில்வே கேட்டை மூடக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பேராவூரணி காவல் ஆய்வாளர்  ஜனார்த்தனன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோர் ரயில்வே உயர் அலுவலர்களை மீட்டு,  வட்டாட்சியர் அலுவலகம் அழைத்து சென்றனர்.
பின்னர் வட்டாட்சியர் முன்னிலையில் ரயில்வே அதிகாரிகள் ரவிக்குமார், மனோகர், ஜான் பிரிட்டோ, ரயில்வே ஒப்பந்ததாரர் பிரசாத் ரெட்டி ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இதன் நிறைவில்,  கேட் மூடப்படுவது தொடர்பான மக்களின் கருத்தை உயர் அலுவலர்களுக்கு தெரிவிப்பது, வரும் 24ஆம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவது என வட்டாட்சியர் பாஸ்கரன் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com