தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையில் செவ்வாய், புதன் ஆகிய 2 நாள் நடைபெற்ற தஞ்சை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை தடுத்து நிறுத்த வேண்டும். தஞ்சை மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களை தூர்வாரி நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். பட்டுக்கோட்டை-அரியலூருக்கு பாப்பாநாடு, ஒரத்தநாடு, தஞ்சாவூர் வழியாக அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டுக்கு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சி.பக்கிரிசாமி, ப.காசிநாதன், மாவட்ட மாதர் சங்கச் செயலர் ம.விஜயலெட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநாட்டில் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், மாநில துணைச்செயலர் கே.சுப்பராயன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.பத்மாவதி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் வே.துரைமாணிக்கம், மாவட்டச் செயலர் இரா.திருஞானம் உள்ளிட்டோர் பேசினர். பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் ஏ.எம்.மார்க்ஸ், நகரச் செயலர் எம்.எம்.சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.