பேராவூரணியில் நீலகண்டபுரம் செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை கடையடைப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடியிலிருந்து மயிலாடுதுறை வழியாக சென்னை செல்லும் ரயில் வழித்தடத்தை அகல பாதையாக்கும் பணிக்காக 2012ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
இதில், முதல்கட்டமாக, காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை பணிகள் நிறைவடைந்து, விரைவில் வெள்ளோட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சிக்கன நடவடிக்கையாக பேராவூரணி முடப்புளிக்காடு செல்லும் ரயில் வழித்தடத்திலுள்ள நீலகண்டபுரம் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடுவதற்கு முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ரயில்வே துறையினர் ஈடுபட்டனர்.
இந்தக் கேட்டை நிரந்தரமாக மூடுவதால் கேட்டிற்கு அந்தப் பகுதியிலுள்ள மருத்துவமனைக்குச் செல்லும் மக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அந்த வழியாக கழனிவாசல், கொரட்டூர், பெருமகளூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் மாற்றுப்பாதையில் செல்வதற்கு சிரமப்படுவார்கள் என்பதால் நிரந்தரமாக கேட்டை மூடாமல் பாதை அமைக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கையை வலியுறுத்தி போராட்டக்குழுவினர் பேராவூரணி ரயில் நிலையம் முன்பாக புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் ஊர்வலமாக சென்று கேட் பகுதியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து பேராவூரணியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ரயில்வே அதிகாரிகள் ஆய்வு: இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் உதய்குமார்ரெட்டி தலைமையிலான ரயில்வே துறை அதிகாரிகள் இந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள புதன்கிழமை வந்தனர்.
அதிகாரிகளை மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் மா.கோவிந்தராசு, முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார், ரயில்வே கேட் போராட்டக்குழு தலைவர் வழக்குரைஞர் மோகன் உள்ளிட்டோர் சந்தித்து பொதுமக்களின் கருத்துகளை எடுத்துரைத்தனர். சம்பவ இடத்தை ஆய்வு செய்த ரயில்வே கோட்ட மேலாளர், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுரங்கப்பாதை அமைத்து தருவதாக உறுதியளித்தார். இதனால் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.