"மகாமகக் குளத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்'

கும்பகோணம் மகாமக குளத்தை எப்போதும் தூய்மையாகவும், பாதுகாப்பானதாகவும் பராமரிக்க வேண்டும் என்றார் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்.
Updated on
1 min read

கும்பகோணம் மகாமக குளத்தை எப்போதும் தூய்மையாகவும், பாதுகாப்பானதாகவும் பராமரிக்க வேண்டும் என்றார் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்.
இதுகுறித்து கும்பகோணத்தில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை மேலும் கூறியது:
கங்கை நதியில் புனித நீராடினால் செய்த பாவங்கள் நீங்கும் என்பதுபோல,  மகாமக குளத்தில் புனித நீராடினால் செய்த பாவங்கள் நீங்கும் என இந்து சமய சாஸ்திரங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்பு பெற்ற மகாமக குளத்தை பார்வையிடவும்,  புனித நீராடவும் உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் அனைத்து நாள்களிலும் வந்து செல்கின்றனர்.
எனவே, இக்குளத்தை திருவிழா நாள்களில் மட்டும் தூய்மைப்படுத்துதல், ஆரத்தி எடுத்தல் என்றில்லாமல், அனைத்து நாள்களிலும் தூய்மையாகவும், பாதுகாப்பானதாகவும் வைத்துக்கொள்ள தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு தனியார் நிறுவனங்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 
தற்போது தமிழக கோயில்களில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுவது இல்லை. பல்வேறு கோயில்கள் இடிந்து சிதிலமடைந்து பராமரிப்பின்றி உள்ளது. சில கோயில்களில் பூஜைகள் கூட நிறைவாக நடைபெறுவது இல்லை. கோயில் பூஜைகளின்போது ஆகம விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படாததால்தான் சில கோயில்களில் தீ விபத்து நேரிடுகின்றன. 
எனவே, மதுரை மீனாட்சியம்மன் கோயில் தொடங்கி பல்வேறு கோயில்களில் ஏற்பட்ட தீ விபத்துகள் நாட்டுக்கு ஏற்படவிருக்கும் அசம்பாவிதத்தையே உணர்த்துகின்றன. நாட்டுக்கு ஏற்படும் அசம்பாவிதத்தை தடுப்பது ஆளும் மன்னனின் கடமை. அவர்களுக்கு அறிவுரை கூறி நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் சாதுக்களுக்கும், சந்நியாசிகளுக்கும் உண்டு. ஆனால்,  தற்போதைய சூழலில் எங்களைப் போன்ற சந்நியாசிகள் கூறுவதை கேட்டு நடக்க அரசாங்கம் முன்வருவதில்லை. மக்கள் தாங்களாகவே ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபட்டு நமது ஆன்மிக பெருமைகளையும், ஆன்மிக தலங்களையும் பாதுகாத்து, பராமரிக்க வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com