மாசிமக திருவிழா: 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிவராகபெருமாள் கோயில் குளத்தில் தீர்த்தவாரி
By DIN | Published On : 20th February 2019 09:05 AM | Last Updated : 20th February 2019 09:05 AM | அ+அ அ- |

கும்பகோணம் ஆதிவராகபெருமாள் கோயில் வராக குளத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது.
இக்கோயிலின் பின்புறம் ஏறத்தாழ 2 ஏக்கர் பரப்பளவிலுள்ள குளம் கடந்த மகாமகத்தின் போது ரூ. 40 லட்சம் மதிப்பில் தூர்வாரி சீரமைக்கப்பட்டது. காவிரி ஆற்றிலிருந்து குளத்துக்குத் தண்ணீர் விடப்பட்டது. ஆனாலும், குளத்தில் தண்ணீர் நிற்காமல் வறண்டது. எனவே, கோயில் நிர்வாகத்தினர், குளத்தில் தண்ணீர் நிற்கும் வகையில் ஏறத்தாழ ரூ. 16 லட்சம் மதிப்பில், களிமண் நிரப்பினர். மேலும், ஆழ் குழாய் மோட்டார், தீர்த்தவாரி மண்டபம் உள்ளிட்டவற்றையும் அமைத்தனர். இதைத்தொடர்ந்து மாசி மக விழாவான செவ்வாய்க்கிழமை வராக குளத்தின் கீழ் கரையில் 50 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி நடைபெற்றது. இதை முன்னிட்டு குளத்தில் தீர்த்தவாரி மண்டபத்துக்கு அம்புஜவல்லி தாயாருடன், ஆதிவராக பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து தீர்த்தபேரருக்கு 21 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.