

தஞ்சாவூரில் இதய நோயால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் இருந்த காவல் உதவி ஆய்வாளர், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
தஞ்சாவூர் கீழவாசல் கும்பகோணத்தான் தெருவைச் சேர்ந்த 56 வயது நபர் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இதய நோயால் பாதிக்கப்பட்ட இவர் அறுவை சிகிச்சை செய்வதற்காக ஜூன் 10 ஆம் தேதி மருத்துவப் விடுப்புப் பெற்று சென்னைக்கு சென்றார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் இவருக்கு ஜூன் 15-ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் பிறகும் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இவர், சென்னையிலிருந்து ஜூன் 27-ஆம் தேதி தஞ்சாவூருக்கு திரும்பினார். பின்னர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜூன் 28-ம் தேதி உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார். அங்கு இவர் திங்கள்கிழமை மாலை உயிரிழந்தார். இதனிடையே, இவருக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது திங்கள்கிழமை இரவு தெரிய வந்தது.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்தது: அவருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பாதிப்பில் இருந்து மீளாத அவர், செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்ட நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருந்தாலும், இதய நோய் காரணமாகவே அவர் இறந்தார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.