தனியார் கைகளில் நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரம்: கண்டுகொள்வாரா மாவட்ட ஆட்சியர்?

வரலாற்றுச் சிறப்புமிக்க நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரம் தனியாரிடமிருந்து மீட்டெடுக்க  மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரம்
நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரம் தனியாரிடமிருந்து மீட்டெடுக்க  மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயிலைச் சார்ந்த சத்திரங்களும், தர்ம நிறுவனங்களால் அமைக்கப்பெற்ற சத்திரங்களும் சேர்த்து 600க்கும் மேற்பட்ட சத்திரங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தஞ்சாவூர் பகுதியில் சத்திரங்கள் அமைந்த அளவுக்கு தென்னிந்தியாவிலேயே எந்தப் பகுதியிலும் சத்திரங்கள் இல்லை என்பது தஞ்சாவூருக்கே உரிய தனிச் சிறப்புகளில் ஒன்றாகும்.

கி.பி.1743ஆம் ஆண்டு முதல் 1937ஆம் ஆண்டு வரை தஞ்சையை ஆட்சி புரிந்த  மராட்டிய மன்னர்கள், ராமேசுவரம் செல்லும் பெருவழியில் யாத்ரீகர்கள் தங்குவதற்காகச் சத்திரங்களை நிறுவியுள்ளனர். இந்தச் சத்திரங்கள் மராட்டிய மன்னர்களின் பெயரில் அல்லது அவர்களின் தாய், மனைவி, சகோதரி, ஆசைநாயகிகளின் பெயரில் அமைக்கப்பட்டுள்ளன. சில சத்திரங்கள் குல தெய்வத்தின் பெயரில் அமையப்பட்டுள்ளன.

ராமேசுவரம் யாத்திரை செல்லும் மக்களும், பக்தர்களும் தங்கி இளைப்பாறுவதற்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும் கட்டப்பட்ட இந்தச் சத்திரங்களில் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் இரண்டு வேளை உணவு அளிக்கப்பட்டுள்ளது.

கோடைக்காலத்தில் சில இடங்களில் தண்ணீர்ப் பந்தல்களும் ஏற்படுத்தப்பட்டு வழிப்போக்கர்கள் இளைப்பாறுவதற்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் தங்குவோருக்கு வசதியாக விளக்குகள் பொருத்தப்பட்டு ஒவ்வொரு சத்திரத்திலும் உணவு வழங்குவதற்கு ஏதுவாக, அப்பகுதி கிராமங்களில் சில சத்திரத்தின் கட்டுப்பாட்டில் விடப்பட்டிருந்தன.

வடநாட்டிலிருந்து ராமேசுவரத்துக்கு யாத்திரையாக வரும் பக்தர்கள் பசியுடன் செல்லக் கூடாது என்பதற்காக ஆங்காங்கே அன்னச் சத்திரங்களை கட்டி, பக்தர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர் மராட்டிய மன்னர்கள். அவர்களின் சிறப்பான நிர்வாக முறைக்குச் சாட்சிகளாக இன்றளவும் விளங்குபவை இந்தச் சத்திரங்கள் என்றால் அது மிகையல்ல.

அந்த கிராமங்களில் உள்ள நிலங்களில் விளையும் தானியங்களைக் கொண்டு உணவு தயாரித்து சத்திரங்களில் வழங்கப்பட்டு வந்தது. மராட்டிய மன்னர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தச் சத்திரங்களில் பல தற்போது சிதிலமடைந்து காணப்படுகின்றன.

செடிகொடிகள் மண்டிக் காணப்படும் இந்தச் சத்திரங்களை நிர்வாகிப்பதற்காக இன்றளவும் சத்திர நிர்வாகம் என்ற தனிப்பிரிவு தஞ்சாவூரில் மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு இயங்கி வருகிறது. தஞ்சாவூர் சத்திர நிர்வாகத்துக்குட்பட்ட பல கிராமங்களில் அவற்றுக்கான நிலங்கள் இன்றும் உள்ளன. இதற்கான குத்தகையை மட்டும் சத்திரங்களின் நிர்வாகம் வசூலித்து வருகிறது. 

தஞ்சாவூர், ஒரத்தநாடு, நீடாமங்கலம், ராசாமடம் போன்ற இடங்களில் உள்ள சத்திரங்கள் பள்ளி மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதிகளாக முன்பு செயல்பட்டு வந்தன. சத்திரங்களின் கட்டுமானங்கள் பலவீனமடைந்து வந்ததால், தற்போது மாணவர் விடுதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக தஞ்சையை ஆட்சிபுரிந்த மராட்டியமன்னர் பிரதாபசிம்மரால் தனது ஆசைநாயகி யமுனாம்பாள் பெயரில் நீடாமங்கலம் அரண்மனை சத்திரம் கட்டப்பட்டது. யமுனாம்பாள் அந்த அரண்மனையில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். பள்ளி மாணவிகளுக்கான விடுதியும் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த அரண்மனையில் தஞ்சாவூர் சென்றுவர சரங்கப் பாதையும் இருந்துள்ளது. அரண்மனை கதவுகளின் ஒவியங்கள் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது அரண்மனை சத்திரம் பொலிவற்ற நிலையில் காணப்படுகிறது.

தஞ்சாவூர் சத்திரம் தாசில்தார் அரண்மனை சத்திரத்தை நிர்வகித்து வருகிறார். சத்திரம் நிர்வாகத்தினர் வரலாற்று சிறப்புமிக்க மராட்டிய மன்னர் காலத்து அரண்மனை சத்திரத்தை எத்தகைய கண்காணிப்புமின்றி தனியார்களுக்கு நீண்டகால குத்தகைக்கு கொடுத்துள்ளது நீடாமங்கலம் பகுதி மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர் இந்த அரண்மனையை புதுப்பித்து சுற்றுலா மையமாக்கி பராமரிக்க தவறியது பெரும் தவறாகும். எனவே மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினர் நீடாமங்கலம் யமுனாம்பாள் அரண்மனைச் சத்திரத்தை தன்வசம் மீட்டெடுத்து அரண்மனையை புதுப்பித்திட நடவடிக்கை  எடுத்திட வேண்டும் என்பதும், நீடாமங்கலம் அரண்மனை சத்திர இடங்களை தனியாருக்கு நீண்டகால குத்தகைக்கு கொடுத்த தஞ்சாவூர் சத்திரம் இலாகா தாசில்தார்களை கண்டறிந்து அவர்கள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதும் நீடாமங்கலம் பகுதி மக்களின் விருப்பமாகும்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும், தொல்பொருள் ஆய்வுத் துறையினரும் இதில் கவனம்செலுத்துவார்களா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com