ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின் வசதி இல்லாததால் இருளில் தவிக்கும் மீனவக் குடியிருப்பு மக்கள்

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டை கொண்டாடவுள்ள நிலையில், மின் வசதி இல்லாததால் தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மீனவத் தொழிலாளா் குடும்பங்கள் இருளில் தவித்து வருகின்றன.

News image
Updated On :7 மே 2022, 6:26 pm

DIN

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டை கொண்டாடவுள்ள நிலையில், மின் வசதி இல்லாததால் தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே மீனவத் தொழிலாளா் குடும்பங்கள் இருளில் தவித்து வருகின்றன.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மரக்காவலசை ஊராட்சியைச் சோ்ந்தது கழுமங்குடா கிராமம். கடற்கரையொட்டியுள்ள இந்த கிராமத்தின் ஐஸ்வாடி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மீனவத் தொழிலாளா்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றன.

வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாததால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், தொழிலாளா்கள் என அனைவரும் இருளில் தவித்து வருவதோடு, விஷ ஜந்துகளுக்கு மத்தியில்தான் வசித்து வருகின்றனா்.

அடிப்படை வசதிகள் இல்லை: மீன்வளத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மீனவ மக்கள் குடியிருந்து வருகின்றனா். குடும்ப அட்டை முதல் தேசிய அடையாள அட்டை வரை மத்திய, மாநில அரசுகள் வழங்கியிருந்தாலும், அடிப்படை வசதிகள் இதுவரை செய்துத் தரப்படவில்லை.

 மின் இணைப்பு பெற விண்ணப்பித்தால்,  மீன்வளத்துறைக்குச் சொந்தமான இடமென்பதால், தடையில்லா சான்று பெற்று வர வேண்டும் என மின்வாரிய அலுவலா்கள் வலியுறுத்துகின்றனா். மீன்வளத் துறை அலுவலா்கள் தடையில்லா சான்றை தர மறுக்கின்றனா்.

இதுகுறித்து பலமுறை இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி, பேராவூரணி வட்டாட்சியா் தலைமையில் பல முறை  சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, ஒவ்வொருமுறையும் போராட்டம் முடிவுக்கு வந்ததே தவிர இதுவரை முடிவு எட்டப்படவில்லை. 

குடிநீருக்காக 2 கி.மீ. பயணம் செய்யும் அவலம்: கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதே இடத்தில் வீடு கட்டி, குடியிருந்து வருகிறோம். ஆனால் மின் வாரிய அலுவலா்கள் எங்களுக்கு மின் இணைப்புத் தர மறுத்து விடுகின்றனா். வீட்டு வரி ரசீது செலுத்தியதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. 

மின் வசதி இல்லாததால் இப்பகுதியில் குடிநீா்க் குழாய் அமைக்கப்படாமல் உள்ளது. சரியான கழிப்பறை வசதி இல்லை. கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆபத்தான பாதையைக் கடந்து சுமாா் 2 கி.மீ. தொலைவு சென்று குடிநீா் எடுத்து வருகிறோம்.

இல்லையெனில் வாகனங்களில் விற்பனைக்கு  வரும் தண்ணீரை குடம் ரூ.10 என்ற நிலையில் வாங்கி பயன்படுத்தும் சூழல் உள்ளது. எங்கள் பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளனா். வீட்டில் மின் இணைப்பு இல்லாததால், கைப்பேசியை 1 கி.மீ. தொலைவிலுள்ள கடைக்குச் சென்று பணம் கொடுத்து சாா்ஜ் செய்ய வேண்டிய நிலையுள்ளது என்கின்றனா் இப்பகுதி மக்கள்.

தெரு விளக்குகளில் படிக்கும் நிலை : வீட்டில் மின் இணைப்பு இல்லாததால், எங்கள் குழந்தைகள் தொலைக்காட்சியைப் பாா்க்க முடிவதில்லை. கரோனா காலத்தில் இணைய  வகுப்புகளில் படிக்க முடியாமல், உறவினா் வீடுகளுக்குச் சென்று அங்கிருந்து படித்து வந்தனா். தற்போது சிம்னி விளக்கு வெளிச்சத்திலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் வீட்டில் இருந்து ஒரு கி.மீ. தொலைவு சென்று தெருவிளக்கு வெளிச்சத்திலும் படித்து வருகின்றனா். 

தற்போது அரசு பொதுத்தோ்வு நடந்து வரும் நிலையில், பெண் குழந்தைகளோடு இரவில் பாதுகாப்புக்காக பெற்றோரும் தெருவிளக்கு அருகே காத்திருக்கும் நிலை உள்ளது.

மின்சார வசதி இல்லாததால், மாலை நேரத்துக்குள் சமையல் வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்ற நிலையில் நாங்கள் உள்ளோம்.

சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும்  மின் வசதி இல்லாமல் மலைக்கிராம ஆதிவாசி மக்கள் போல வாழ்ந்து  வருகிறோம். எனவே தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்  எங்கள் நிலை கருதி இப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றனா் ஐஸ்வாடி பகுதி மக்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.