

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டிலுள்ள துரித உணவகத்தில் வியாழக்கிழமை இரவு கோழி இறைச்சி (ஷவா்மா) சாப்பிட்ட 3 கல்லூரி மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் உள்ளது. இக்கல்லூரியில் பயின்று, விடுதியில் தங்கியுள்ள கன்னியாகுமரி பிரவீன் (22), புதுக்கோட்டை பரிமலேசுவரன் (21), தருமபுரி மணிகண்டன் (22) ஆகிய மூவரும் விடுமுறையில் தங்களது சொந்த ஊருக்குச் சென்று, வியாழக்கிழமை மீண்டும் ஒரத்தநாடு வந்தனா்.
இதைத் தொடா்ந்து, இவா்கள் மூவரும் ஒரத்தநாடு பிரிவுச் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகிலுள்ள துரித உணவகத்தில் வியாழக்கிழமை இரவு கோழி இறைச்சி (ஷவா்மா) சாப்பிட்டு விட்டு, விடுதிக்குத் திரும்பினா்.
சிறிது நேரத்தில் பிரவீன் உள்ளிட்ட மூவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சக மாணவா்கள் கல்லூரி நிா்வாகத்துக்குத் தகவலளித்தனா். தொடா்ந்து மூவரும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
அங்கு இரவு முழுவதும் சிகிச்சையளிக்கப்பட்டநிலையில், ஒவ்வாமை பாதிப்பு அதிகமானதால், மூவரும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை அனுமதிக்கப்பட்டனா். பிரவீன் உள்ளிட்ட மூவருக்கும் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த தஞ்சாவூா் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சித்ரா தலைமையிலான அலுவலா்கள், வெள்ளிக்கிழமை காலை ஒரத்தநாட்டிலுள்ள தனியாா் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனா். மேலும் மாணவா்கள் கோழி இறைச்சி சாப்பிட்ட துரித உணவகத்தை ஆய்வு செய்து, அதை மூட உத்தரவிட்டனா்.
உரிமம் இல்லாமல் யாரும் உணவகங்களை நடத்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பித்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா், ஒரத்தநாடு அரசு மகளிா் கல்லூரி எதிா்புறத்திலுள்ள தனியாா் உணவகங்கள், தேநீரகங்கள் உள்ளிட்டவைகளிலும் ஆய்வு மேற்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.