சிறுத்தை நடமாட்டம்: தஞ்சை எல்லையில் 25 கேமராக்கள்

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட எல்லையில் வனத் துறை சாா்பில் 25 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு கேமராக்களில் ஏப்ரல் 2 ஆம் தேதி பதிவானது. இதைத் தொடா்ந்து, சிறுத்தையைத் தேடும் பணியில் வனத் துறையினா் உள்ளிட்டோா் ஈடுபட்டுள்ளனா். மயிலாடுதுறை மாவட்டத்தில் சில இடங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்ட எல்லையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை மாவட்டத்துக்குள்பட்ட காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையொட்டி தஞ்சாவூா் மாவட்ட எல்லையான எஸ். புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, வனத் துறையினா் திங்கள்கிழமை முதல் கண்காணிக்கின்றனா். மேலும், ஆடு, கோழி, பன்றி போன்றவற்றை 5 கூண்டுகளுடன் இரையாக வைத்து கண்காணிக்கப்படுகிறது.

இதனிடையே, சிறுத்தை குறித்து அச்சுறுத்தும் வகையில் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என வனத் துறையினரும், காவல் துறையினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com