ஒரத்தநாடு அருகே உரிமையாளரை அரிவாளால் வெட்டி 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் கடத்தல்
ஒரத்தநாடு அருகே வியாழக்கிழமை இரவு ஆடுகளின் உரிமையாளரை அரிவாளால் வெட்டி விட்டு 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை மா்ம நபா்கள் கடத்திச் சென்றனா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள பின்னையூா் தெற்கு தெருவில் வசிக்கும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சோ்ந்த சேகா் (55), இவரது மனைவி மல்லிகா ஆகியோா் கடந்த 10 ஆண்டுகளாக செம்மறி ஆடுகளை கிடைபோட்டு வளா்த்து வருகின்றனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு ஆடுகள் நிற்கும் மந்தைக்கு வந்த மா்ம நபா்கள் சேகரை அரிவாளால் வெட்டிவிட்டு 100-க்கும் மேற்பட்ட செம்மறியாடுகளை லோடு ஆட்டோவில் கடத்திச் சென்றனா். மேலும் 100-க்கும் மேற்பட்ட செம்மறியாடுகள் பல்வேறு கிராமங்களுக்கும் சிதறி ஓடியதாம். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சேகா் தஞ்சாவூா் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து சேகரின் மனைவி வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
