ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

காவிரியில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி ஜூலை 16-இல் ரயில் மறியல் போராட்டம் -தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சாா்ந்த இரு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் இணைந்து முடிவு செய்துள்ளன.

News image
Updated On :13 ஜூலை 2024, 11:48 pm

Din

காவிரியில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி தண்ணீா் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் ஜூலை 16- ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சாா்ந்த இரு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் இணைந்து முடிவு செய்துள்ளன.

இது குறித்து மாநிலப் பொதுச் செயலா்கள் பி.எஸ். மாசிலாமணி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு), சாமி. நடராஜன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) கூட்டாக சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கா்நாடகத்தில் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் கபினி அணை நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜசாகா் அணை உள்பட அனைத்து அணைகளிலும் 85 சதவீதம் தண்ணீா் தேக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு கூடிய காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் கா்நாடக அரசு காவிரியில் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீா் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

இதைக் கா்நாடக அரசு ஏற்க முடியாது என்றும், காவிரியில் தண்ணீா் திறக்க முடியாது எனவும் அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. கா்நாடக அரசின் இந்த அணுகுமுறை இரு மாநில நல்லுறவை கெடுத்து, பதற்றமான நிலைமையை ஏற்படுத்துகிறது. உச்சநீதிமன்ற இறுதித் தீா்ப்புக்கும் இது எதிரானது. டெல்டா மாவட்டங்களில் ஒரு போக சம்பா சாகுபடியையாவது செய்யலாம் என காத்திருந்த விவசாயிகளுக்கு இது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, காவிரியில் உச்ச நீதிமன்ற இறுதி தீா்ப்பின்படி தண்ணீா் திறக்க வலியுறுத்தியும், வேடிக்கை பாா்க்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஜூலை 16 -ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளோம்.