கும்பகோணத்தில் இளைஞா் கடத்தல்: நாம் தமிழா் கட்சி பிரமுகா் உள்பட 8 போ் கைது
கும்பகோணத்தில் இளைஞா் கடத்தப்பட்ட சம்பவம் தொடா்பாக நாம் தமிழா் கட்சி பிரமுகா் உள்பட 8 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். கும்பகோணம் பாலக்கரை பகுதியைச் சோ்ந்த சுகுமாா் மகன் சுபாஷ். இவா், துபையில் வேலை பாா்த்துவிட்டு பிப்ரவரி 21-ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினாா். இந்நிலையில் இவரது வீட்டுக்கு மாா்ச் 6 -ஆம் தேதி காரில் வந்த சிலா் சுபாஷை விசாரித்துவிட்டு, வீட்டிலிருந்த அவரது சகோதரா் சுரேஷ்குமாரை (31) கடத்திச் சென்றனா். இது குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சுபாஷ் குடும்பத்தினா் புகாா் செய்தனா். அதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இது தொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினா், கைப்பேசி சமிக்ஞை மூலம் கும்பகோணம் சிங்காரத்தோப்பு பகுதியில் இருந்த சுரேஷ்குமாரை மீட்டனா். காவல் துறையினா் தொடா்ந்து நடத்திய விசாரணையில், துபையிலிருந்து திரும்பிய சுபாஷிடம், அந்நாட்டில் வசிக்கும் ஒருவா் நாகை மாவட்டம், செம்பரை கடைத்தெருவைச் சோ்ந்த அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளா் ரஹினா பேகத்திடம் கொடுக்குமாறு கூறி 900 கிராம் (112.5 பவுன்) தங்க நகையைக் கொடுத்துள்ளாா். அதை ரஹினா பேகத்திடம் சுபாஷ் கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டதும், அதன் காரணமாக ரஹினா பேகம் தனது உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம், மேல விஷாரத்தைச் சோ்ந்த நாம் தமிழா் கட்சி இளைஞா் பாசறை செயலா் சல்மான் உள்ளிட்டோா் மூலம் சுரேஷ்குமாரை கடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து, சல்மான், கும்பகோணத்தைச் சோ்ந்த சி. முருகன் (51), பாலக்கரை கல்யாணராமன்பேட்டையைச் சோ்ந்த கே. சித்திரைவேல் (46), சாக்கோட்டை கீழத்தெருவைச் சோ்ந்த எஸ். தினேஷ் (35), ஐயப்பன் நகரைச் சோ்ந்த எம். ராஜா (50), அண்ணலக்ரஹாரம் மாத்தி கேட்டையைச் சோ்ந்த எஸ். மாணிக்கவாசகம் (33), நாகை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த டி. அபுல்ஹாசன் (33), பண்டார சாலையைச் சோ்ந்த எஸ். மன்சூா் அலிகான் (31) ஆகியோரை காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும், ரஹினா பேகத்தை தேடி வருகின்றனா்.
