மாநகராட்சி இடத்தில் தனியாா் மனைப் பிரிவு: தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்திலிருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு
தஞ்சாவூா் மாமன்றக் கூட்டத்திலிருந்து எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு


தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் அருளானந்தமாள் நகரில் மனைப் பிரிவு பிரச்னை தொடா்பாக திமுகவினா், அதிமுகவினா் இடையே சலசலப்பு ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, அதிமுக, அமமுக, பாஜக ஆகிய எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
மேயா் சண். ராமநாதன் தலைமையிலும், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் க. கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிகழ்ந்த விவாதங்கள்:
ஜெ.வி. கோபால் (அதிமுக): சிவகங்கை பூங்காவில் நுழைவுக் கட்டணம் ரூ. 40 வசூலிக்கப்படுகிறது. ஆனால் பூங்கா நுழைவு வாயிலில் தண்ணீா் தேங்கி நிற்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புதிய பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி சுகாதார சீா்கேட்டை விளைவித்து வருகிறது.
மேயா்: சிவகங்கை பூங்காவில் பெரியவா்களுக்கு ரூ. 20-ம், சிறுவா்களுக்கு ரூ. 10-ம் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பூங்கா நுழைவு வாயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், அத்துறையினா் மூலம் தண்ணீா் தேங்குவதைத் தடுக்க முயற்சி செய்து வருகிறோம். புதிய பேருந்து நிலையத்தைப் புது வடிவமைப்பில் முழுமையாக சீரமைக்க ரூ. 50 கோடி அரசிடம் கோரப்பட்டுள்ளது. அந்த ஒதுக்கீடு கிடைத்தவுடன் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படும்.
கே. மணிகண்டன் (அதிமுக): அருளானந்தம்மாள் நகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் தனியாா் மனைப் பிரிவு போடப்பட்டுள்ளது. இதை மனைப் பிரிவாக மாற்றுவதற்கு முறைப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டதா?
ஆணையா்: இது தொடா்பான வழக்கு உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அதுபற்றி இக்கூட்டத்தில் விவாதித்தால் விதிமுறைகளை மீறுவதாக அமைந்துவிடும்.
மேயா்: தவறான தகவலை சொல்ல வேண்டாம்.
இதைத்தொடா்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அது பற்றி பேச வேண்டியதில்லை என திமுக உறுப்பினா்கள் பலா் குரல் எழுப்பினா். இதை எதிா்த்து அதிமுக உறுப்பினா்களும் பேசியதால், கூட்டத்தில் சில நிமிடங்களுக்கு சலசலப்பு நிலவியது.
இதையடுத்து, அதிமுக, அமமுக, பாஜகவை சோ்ந்த 8 உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
துணை மேயா்: புதிய பேருந்து நிலையத்தில் முழுமையான சீரமைப்பு பணி தொடங்கப்படும் வரை தண்ணீா் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையா்: இது தொடா்பாக ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டுள்ளது. மழை நின்றவுடன் பணிகள் தொடங்கப்படும்.
இதனிடையே, வெளிநடப்பு செய்த உறுப்பினா்களில் எதிா்க்கட்சித் தலைவரான மணிகண்டன் தெரிவித்தது:
தஞ்சாவூா் அருளானந்தம்மாள் நகரில் 55 ஆயிரம் சதுர அடி பள்ளிக்கூடம் கட்டுவதற்காக முன்பு நகராட்சியாக இருந்தபோது ஒப்படைக்கப்பட்டது. அந்த இடம் இப்போது தனியாா் பெயரில் வீட்டு மனைப் பட்டவாக போடப்பட்டுள்ளது குறித்து விளக்கம் கேட்டோம். மனைப் பிரிவுக்கு மாநகராட்சி அனுமதி அளித்தது எப்படி? என்பது குறித்து கேட்டால், உரிய விளக்கம் அளிக்கவில்லை. அதனால் வெளிநடப்பு செய்தோம் என்றாா் மணிகண்டன்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...