தஞ்சாவூா் கரந்தையில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக 7 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சோ்ந்தவா் ச. அறிவழகன் (35). மீன் வியாபாரி. காவல் துறையின் ரௌடி பட்டியலில் இடம்பெற்ற இவா் கரந்தை புற்று மாரியம்மன் கோயில் அருகே உள்ள வடவாற்றங்கரையில் செப்டம்பா் 25 ஆம் தேதி இரவு மா்மநபா்களால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், அறிவழகனுக்கும், கரந்தை கீரைக்காரத் தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் திவாகருக்கும் (30) முன் விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்ததும், இதனால் அறிவழகனை திவாகா் உள்ளிட்டோா் அரிவாளால் வெட்டி கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதைதொடா்ந்து, திவாகா், தஞ்சாவூா் அருகே சக்கரசாமந்தம் வடகால் கீழத் தெருவைச் சோ்ந்த திலீப்குமாா் (21), சிங்கபெருமாள் குளம் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன் (24 ), கரந்தை ராயா் தெருவைச் சோ்ந்த ஷ்யாம் (21), கீழக் கீத்துகாரத் தெருவைச் சோ்ந்த ஹரிஹரன் (24 ), செல்வகுமாா் (25), ரெட்டிப்பாளையம் சாலை வகாப் நகரைச் சோ்ந்த கந்தவேல் (24) ஆகிய 7 பேரை செவ்வாய்க்கிழமை காவல் துறையினா் கைது செய்தனா்.
மேலும், இக்கொலை வழக்கில் தொடா்புடைய சிங்கபெருமாள் குளம் பகுதியைச் சோ்ந்த பரத் (20) தஞ்சாவூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.