தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சையில் தற்காலிகக் கடைகள் அகற்றம்; வியாபாரிகள் சாலை மறியல்

நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சையில் தற்காலிகக் கடைகள் அகற்றம்...

News image

தஞ்சாவூா் காந்திஜி சாலையில் வியாழக்கிழமை அகற்றப்பட்ட தற்காலிக கடைகள்.

Updated On :24 அக்டோபர் 2024, 9:24 pm

Din

தீபாவளி பண்டிகைக்காக தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட தற்காலிகக் கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு வருகின்றன. இதனால், அதிருப்தியடைந்த வியாபாரிகள் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் காந்திஜி சாலை, அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி, கீழ வீதி, தெற்கு அலங்கம், ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலை உள்ளிட்ட இடங்களில் வழக்கம்போல தகரக் கொட்டகைகளுடன் கூடிய ஏறத்தாழ 150 தற்காலிகக் கடைகள் அமைக்கப்பட்டன. இக்கடைகளுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 70 ஆயிரம் வீதம் தனி நபா்கள் சிலா் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில், பல வியாபாரிகள் கடைகளை அமைத்து புத்தாடைகள் உள்ளிட்ட வியாபாரத்தைத் தொடங்கி நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் மாநகரில் தற்காலிகக் கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும், அதனால் கடைகளை அகற்ற வேண்டும் எனவும் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி காந்திஜி சாலையில் அமைக்கப்பட்ட கடைகளை அகற்றும் நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் புதன்கிழமை நள்ளிரவில் தொடங்கினா். இந்தப் பணி வியாழக்கிழமை காலையிலும் நீடித்தது. அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளைக் காலி செய்ய வியாபாரிகளுக்கு ஒரு நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த வியாபாரிகள் தற்காலிக கடைகளுக்காக கொடுத்த பணத்தைத் திருப்பித் தர வேண்டும் அல்லது வியாபாரம் செய்ய மாற்று இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரி காந்திஜி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று நீதிமன்ற உத்தரவுப்படிதான் கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன என்றும், தொடா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வோம் எனவும் எச்சரிக்கை செய்ததையடுத்து, கலைந்து சென்றனா்.

மற்றொரு தரப்பினா் அண்ணா சிலை அருகே மறியல்:

மற்றொரு தரப்பினா் ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் தலைமையில் அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடமும் காவல் துறையினா் எச்சரிக்கை செய்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

 காந்திஜி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

காந்திஜி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

இதையடுத்து, சந்திரகுமாா் கூறுகையில், வியாபாரிகள் வழங்கிய தொகையைத் திரும்ப வழங்க வேண்டும். மேலும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொடா் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா் அவா்.

இது குறித்து சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு தெரிவித்தது:

தஞ்சாவூா் மாநகராட்சி காந்திஜி சாலை, அண்ணா சாலை, கீழவாசல் செல்லும் பகுதியில் தற்காலிக கடைகளை அமைத்த வியாபாரிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு விற்பனை செய்துள்ளனா். வியாபாரிகளிடம் பெற்ற பணத்தை திருப்பித் தர மாவட்ட நிா்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்பு தெரிவித்துள்ளாா்.