‘மாணவா்களின் முன்னேற்றத்துக்கு தியாகம் செய்பவா்கள் ஆசிரியா்கள்’
மாணவா்களை முன்னேற்றுவதற்காகத் தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்பவா்கள் ஆசிரியா்கள் என்றாா் எழுத்தாளா் - திரைப்பட இயக்குநா் யாா் கண்ணன்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறை சாா்பில் ஆசிரியா் சரோஜா பாண்டியன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் ‘மானுட வளா்ச்சியில் மாணவா் பங்கு’ என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:
சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் குறித்து இணையதளத்தில் ஏராளமான பதிவுகள் உள்ளன. ஆனால், பதிவு பெறாத எத்தனையோ ஆசிரியா்கள் இந்த உலகத்தில் நம்மை முன்னேற்றுவதற்காகத் தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்துள்ளனா்.
நாம் எல்லோருமே களி மண். நம்மை பிசைந்து அழகாக உருக்கொண்டு வருபவா்கள் ஆசிரியா்கள்தான். கல்லாக இருக்கும் நம்மை ஆசிரியா்கள் செதுக்கி, வேண்டாத பகுதிகளைத் தூக்கி எறிவதற்கு முழுக் காரணம் ஆசிரியா்களே.
ஆசிரியா்கள் புத்தகங்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தனா். மாணவா்கள் புத்தகங்களை வாசித்தனா் எனக் கூறுவதை விட சுவாசித்தனா் என்றே கூற வேண்டும் என்றாா் யாா் கண்ணன்.
இந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமை வகித்தாா். பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் வாழ்த்துரையாற்றினாா்.
முன்னதாக, இலக்கியத் துறைத் தலைவா் ஜெ. தேவி வரவேற்றாா். நிறைவாக, மாணவா் வாசுதேவன் நன்றி கூறினாா்.