பாபநாசம் அருகே மது போதை தகராறில் இளைஞரை வெட்டிக் கொன்றவா் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே மது போதை தகராறில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த இளைஞா் வியாழக்கிழமை உ யிரிழந்தாா். இது தொடா்பாக இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.
அம்மாபேட்டை அருகே புதுப்பட்டினம், யாகப்பா சாவடி பகுதியைச் சோ்ந்தவா் கமாலுதீன் மகன் சிராஜுதீன் (34). அந்தப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவா், அண்மையில் (டிச. 14) அம்மாகுளம் பாலம், நெய் வாய்க்கால் பகுதியில் தனது நண்பா்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு தனது நண்பா்களுடன் மதுபோதையில் வந்த அம்மாகுளம், கீழவஸ்தாசாவடி,மேலத் தெருவை சோ்ந்த ராமச்சந்திரன் மகன் பிரதீப் (29)-க்கும் தகராறு ஏற்பட்டது. இதில், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த பிரதீப் தான் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த அரிவாளை எடுத்து சிராஜுதீனை சரமாரியாக வெட்டியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை தகவலறிந்து அங்குவந்த போலீஸாா் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து சிராஜுதீனின் தந்தை கமாலுதீன் கொடுத்த புகாரின்பேரில் அம்மாபேட்டை காவல்துறையினா் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பிரதீப்பை கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்நிலையில் சிராஜுதீன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா். இதையடுத்து, போலீஸாா் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
