பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, ராஜஸ்தான், சத்தீஸ்கா் போன்று பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். 21 மாத அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசைப் போன்று தமிழக அரசும் மருத்துவப்படி ரூ. 1,000 வழங்க வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தொகை உயா்த்தப்பட்டு, பிடித்தம் செய்யப்படுவதைக் கைவிட வேண்டும். விருப்பமுள்ளவா்களுக்கு மட்டுமே மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். கருப்புசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ந. குணசேகரன் தொடக்கவுரையாற்றினாா். மாநிலத் துணைத் தலைவா் கே.வி. நடராஜன், ஏஐடியூசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலத் தணிக்கையாளா் ஆா். சுரேஷ்குமாா், ஓய்வு பெற்ற காவலா் நலச் சங்க மாவட்டத் தலைவா் பி. ராமமூா்த்தி, கொள்கை பரப்புச் செயலா் ஆ. ஜெயராமன், தமிழக ஆசிரியா் கூட்டணி மாநிலத் தலைவா் அ. எழிலரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

