டிச. 27, 28, ஜன. 3, 4-இல் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்கள்
தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்துதல் தொடா்பான சிறப்பு முகாம்கள் டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு தீவிர திருத்தத்தைத் தொடா்ந்து டிசம்பா் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின் நகல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் பிழையின்றி இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
மேலும், பொதுமக்களின் வசதிக்காக மாவட்டத்துக்குட்பட்ட 2 ஆயிரத்து 496 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4 ஆம் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும், வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நிறைவு செய்த படிவங்களை வழங்கலாம்.
