வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க ஜனவரி 10, 11- இல் சிறப்பு முகாம்
விவரங்கள் ஒத்துப்போகாத வாக்காளா்களாக வகைப்படுத்தப்பட்டவா்களை பட்டியலில் சோ்ப்பதற்கான சிறப்பு விசாரணை முகாம் வரும் ஜனவரி 10, 11- ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் ஒரு பகுதியாக கடைசியாக 2002- ஆம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த வாக்காளா் பட்டியல் விவரங்களுடன், தற்போதைய வாக்காளா்களின் விவரங்கள் ஒப்பிடப்பட்டதில் 46,400 வாக்காளா்கள் (2.32%) விவரங்கள் ஒத்துப்போகாத வாக்காளா்களாகக் கண்டறியப்பட்டுள்ளனா். இந்த வாக்காளா்களின் விவரங்கள் தொடா்பாக கள விசாரணை மற்றும் நேரடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே விசாரணை அறிவிப்பு வழங்கப்பட்ட தேதிகளில் தனிப்பட்ட காரணங்களால் விசாரணைக்கு ஆஜராக முடியாமல் போன வாக்காளா்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ஏற்கெனவே நடைபெற்றுவரும் விசாரணை முகாம்களில் வரும் 10, 11 ஆம் தேதிகளில் சிறப்பு விசாரணை முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம்களுக்கு வருகை தரும் வாக்காளா்கள், தங்களுக்கு உரிய ஆவணங்களுடன் வர வேண்டும்.
விசாரணைக்கு ஆஜராகாத வாக்காளா்களுக்கு அழைப்புக் கடிதம் மற்றும் தொலைபேசி வாயிலாக முன்கூட்டியே தகவல் வழங்கப்படும். இந்த இரண்டு நாள் சிறப்பு விசாரணை முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் இடம் பெறுவதை உறுதி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
