ஆட்சியில் பங்கு என்பது ஒவ்வொரு தொண்டரின் கருத்து: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்
ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு தொண்டரின் கருத்து என்றாா் அக்கட்சியைச் சாா்ந்த கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவா் பின்னா் மேலும் தெரிவித்தது:
ஆட்சியில் பங்கு தொடா்பாக தமிழக முதல்வரிடம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா்கள் கோரிக்கை வைத்துள்ளனா். பேச்சுவாா்த்தை விரைவில் தொடங்கப்படவுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை அனைத்து முடிவுகளையும் எடுக்கும்.
விஜய் இப்போதுதான் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளாா். யாா் தீய சக்தி, தூய சக்தி என்பது வரும் தோ்தலில் தெரியவரும். தமிழக முதல்வா் ஸ்டாலின் மக்களுக்கு நல்ல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதால், திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மாநில அரசு 40 சதவீதம் பங்களிப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து, பெயரையும் மாற்றியுள்ளது. மாநில அரசுகள் ஏற்கெனவே பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவரும் நிலையில், 40 சதவீதம் பங்களிப்பு செய்வது சாத்தியமில்லை. எனவே, இத்திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற்று, மகாத்மா காந்தி பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என்றாா் விஜய் வசந்த்.
