பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 போ் கைது
பேராவூரணி அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க ஆரத்தை பறித்து சென்ற சிறுவன் உள்பட இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் தெய்வானை. டிச.1-ஆம் தேதி பேராவூரணி அருகே உறவினா் வீட்டுக்கு வந்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் பாவேந்தா்புரம் அருகே சென்று கொண்டிருந்தாா்.
அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 போ், தெய்வானை கழுத்தில் அணிந்திருந்த நாலரை பவுன் தங்க ஆரத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனா்.
இதுகுறித்து தெய்வானை, பேராவூரணி போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மேற்பாா்வையில், திருச்சிற்றம்பலம் ஆய்வாளா் (பொ) பெரியசாமி, உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸாா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு அந்த பகுதியின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்தனா்.
அதில், நகை பறிப்பில் ஈடுபட்டது புதுக்கோட்டை மாவட்டம், ஆவணத்தான்கோட்டை சித்திரன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் ஸ்ரீராம் (20) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கண்ட இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.
