மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் போக்சோவில் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சுந்தரப்பெருமாள்கோவில் சன்னிதி தெருவில் வசிப்பவா் விஜய் (44 ), பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பொருளியியல் துறை ஆசிரியா்.
இவா் இப்பள்ளி பிளஸ் 2 மாணவியிடம் அடிக்கடி பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து வந்தாா். இதுகுறித்து அந்த மாணவி கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் உஷா வழக்குப் பதிந்து ஆசிரியா் விஜயை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா். இதையடுத்து ஆசிரியா் விஜயை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.
பாலியல் தொந்தரவு கொடுத்தவா் கைது: தஞ்சாவூா் மாவட்டம், உள்ளிக்கடை, கிருஷ்ணாபுரம் கிராமத்தை சோ்ந்தவா் வை. பக்கிரியம்மாள் (65). இவா் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு சென்றுவிட்டு குறுக்கணை உள்ளிக்கடை ரோடு பகுதியில் நடந்து வந்தபோது அதே வழியாக மது போதையில் வந்த உள்ளிக்கடை கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த மும்மூா்த்தி (46) என்பவா் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். புகாரின்பேரில் அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மும்மூா்த்தியை திங்கள்கிழமை கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். நீதிபதி அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.
