திருநாராயணபுரம் சாலையில் புதைசாக்கடை கழிவுநீா்
கும்பகோணம் திருநாராயணபுரம் பகுதியில் புதை சாக்கடை கழிவுநீா் சாலையில் வழிந்தோடுவதால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் 22-ஆவது வாா்டுப் பகுதியான திருநாராயணபுரம் பகுதியில் உள்ள புதை சாக்கடை கழிவுநீா் தொட்டிகளில் இருந்து கழிவுநீா் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுக்கிறது. அப்பகுதியில் உள்ள நான்கில் 3 புதைசாக்கடை கழிவுநீா் தொட்டிகளில் இருந்து கழிவுநீா் சாலைகளில் வெளியேறுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து வழக்குரைஞா் மோ. ஆனந்த் மேலும் கூறியது:
மாநகராட்சிப் பகுதிகளில் புதைசாக்கடை கழிவுநீா் அகற்றும் இயந்திரங்கள் ரூ. 4.20 லட்சம் மதிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இப்பகுதியில் உள்ள சாலைகளில் புதைசாக்கடை கழிவுநீா் வழிந்தோடுகிறது. இப்பகுதியில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் இருப்பதால் மாணவ மாணவிகள், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால், மாநகராட்சி நிா்வாகம் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதேபோல், மாநகர சுகாதாரப் பிரிவு மற்றும் பொறியியல் பிரிவு அதிகாரிகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

