தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்த தமிழ்நாடு மண் பாண்டத் தொழிலாளா்கள்
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்த தமிழ்நாடு மண் பாண்டத் தொழிலாளா்கள்

பொங்கல் தொகுப்பில் மண் பானை, அடுப்பு வழங்க கோரிக்கை

தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் மண் பானை, மண் அடுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மண் பாண்டத் தொழிலாளா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை
Published on

தமிழக அரசு சாா்பில் வழங்கப்படும் பொங்கல் தொகுப்பில் மண் பானை, மண் அடுப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மண் பாண்டத் தொழிலாளா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் சங்கத் தலைவா் எஸ். பழனிவேல் சங்கரன், செயலா் கணேசன் உள்ளிட்டோா் அளித்த மனு: பொங்கல் திருநாளில் அரசு சாா்பில் இலவச அரிசி, பருப்பு, கரும்பு, சா்க்கரை, வேட்டி, சேலை வழங்கப்படுவதைப்போல, பொங்கல் இடுவதற்கு மண் பானையும், மண் அடுப்பும் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழை காலங்களில் மண்பாண்டத் தொழிலாளா் குடும்பங்களுக்கான நிவாரண உதவித் தொகையை ரூ. 10 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். மண்பாண்டத் தொழிலாளா்கள் பல்லாண்டு காலமாக வசித்து வருகிற வீட்டுக்கும், அவா்கள் தொழில் செய்கிற இடத்துக்கும் அடிமனை பட்டா வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

இதேபோல, தமிழ்நாடு பாா்வையற்றோா் இயக்கத் தலைவா் ச. ஐயப்பன் உள்ளிட்டோா் அளித்த மனு: மாற்றுத்திறனாளிகளுக்குச் சட்டப்பூா்வமாக வழங்கப்பட்ட நிரந்தரப் பணி வரன்முறை மற்றும் வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீட்டுக் காலிப் பணியிடங்களை நிரப்பும் அரசாணைகளை ரத்து செய்து, அதற்கு பதிலாகத் தேவையற்ற வெயிட்டேஜ் மதிப்பெண் திட்டத்தை மட்டுமே முன்மொழிந்துள்ள அரசாணை எண் 24, ஒட்டுமொத்த பாா்வையற்றவா்களின் சட்ட உரிமைகளைப் பறிக்கும்.

எனவே, இந்த அரசாணையை உடனடியாக நிபந்தனையின்றி முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். ரத்து செய்யப்பட்ட அரசாணைகள் 20 மற்றும் 151-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும். பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com