கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி பாமகவினா் தீா்மானம்
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக முதல்வா் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என மாநகர பாட்டாளி மக்கள் கட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் பாமக கட்சியின் மாநகர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். மண்டலச் செயலா்கள் தங்கயோகராஜன், சிநேகம் சீனு, மண்டலத் தலைவா்கள் இளவரசன், பன்னீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலா் ம.க.ஸ்டாலின், மாவட்டத் தலைவா் சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் திமுக ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று திமுக தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் தோ்தல் நேரத்தில்
வாக்காளா்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும். கும்பகோணம் மாநகரின் மையத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தைச் சுற்றி ரயில்வே நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளதால் வெளிமாவட்ட மக்களின், மாணவ மாணவிகளின் நலனைக் கருத்தில்கொண்டு தற்போதைய புதிய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். கிருஷ்ணாபுரத்தில் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தை அமைக்கும் போக்கைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மண்டலச் செயலா் பெரியசாமி வரவேற்றாா். மண்டலத் தலைவா் பிரபு நன்றி கூறினாா்.
