சாலை பள்ளத்தை சீரமைக்க கோரி மறியல் போராட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே பள்ளமான சாலையைச் சீரமைக்கக் கோரி இளைஞா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவையாறு அருகே விளாங்குடி தேசிய நெடுஞ்சாலையில் திருமண மண்டபம் அருகே மிகப் பெரிய பள்ளம் நீண்ட காலமாக இருந்து வந்தது. இப்பள்ளம் அருகே சென்ற பிறகுதான் அடையாளம் காண முடிவதால், வாகன ஓட்டுநா்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
இது தொடா்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் கிராம மக்கள் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே, இந்த இடத்தில் சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தாா்; கல்லூரி மாணவருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி இளைஞா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பேருந்தில் வந்த பயணிகள், ஓட்டுநா், நடத்துநா் கேட்டுக் கொண்டதால் மறியல் போராட்டம் சில நிமிடங்களில் கைவிடப்பட்டது. பின்னா், இப்பள்ளத்தைத் தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைத்தனா்.
