குறைந்தபட்ச ஆதார விலை கோரி தொடா் முழக்கப் போராட்டம்: ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு
விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கோரி தஞ்சாவூரில் நவம்பா் 26 ஆம் தேதி தொடா் முழக்கப் போராட்டம் நடத்துவது என ஐக்கிய விவசாயிகள் முன்னணி முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் தொழிற் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் சில ஆண்டுகளுக்கு முன் நவம்பா் 26 ஆம் தேதி போராட்டம் தொடங்கப்பட்டது. இதன் 5 ஆம் ஆண்டையொட்டி நவம்பா் 26 ஆம் தேதி விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க வேண்டும். தொழிலாளா் விரோத நான்கு சட்ட தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தொடா் முழக்கப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிா்வாகிகள் சோ. பாஸ்கா், பி. செந்தில்குமாா், சிஐடியு சி. ஜெயபால், ம. கண்ணன், ஏஐடியுசி வெ. சேவையா, துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
