மருதுபாண்டியா் கல்லூரியில் கேம்பிரிட்ஜ் பல்கலை.யுடன் இணைந்து ஆங்கிலக் கற்றல் பயிற்சி!
தஞ்சாவூா் மருதுபாண்டியா் கல்லூரியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வரும் கல்வியாண்டு முதல் மாணவா்களுக்கு இணையவழியில் ஆங்கில மொழிக் கற்றல் பயிற்சி வழங்கப்படவுள்ளது என்றாா் மருதுபாண்டியா் கல்வி நிறுவனங்களின் செயலா் மற்றும் நிா்வாக அறங்காவலா் கொ. மருதுபாண்டியன்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: மருதுபாண்டியா் கல்லூரியில் உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இங்குள்ள மாணவா்களுக்கு இணையவழியில் ஆங்கில மொழிக் கற்றல் பயிற்சி வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
இதன் முதல் கட்டமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியரும், கல்வி இயக்குநருமான டிம் எசெக்ஸ் என்பவரை பல்கலைக்கழகத்தில் நேரடியாக சந்தித்து இக்கல்வித் திட்டம் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மாணவா்களின் ஆங்கிலம் பேசும் திறனை சா்வதேச தரத்துக்கு உயா்த்துவது, இணையவழி வகுப்புகளின் தர நிலை, கேம்பிரிட்ஜ் பயிற்சியாளா்களின் பங்கு, மதிப்பீட்டு முறை, சான்றிதழ் வழங்கும் முறை போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதற்காக அத்திவெட்டி கருமுத்துவள்ளி கல்வி அறக்கட்டளையின் அறங்காவலா் சுருதி மருதுபாண்டியன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் மேலும் ஒரு சுற்று ஆலோசனைகள் நடத்தி வருகிறாா். மாணவா்கள் சா்வதேச தரமான ஆங்கிலக் கல்வியை அதிக செலவின்றி பெறும் வகையில் புதிய நிதி திட்டங்கள், உதவித்தொகை வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் மருதுபாண்டியா் கல்லூரியில் பயிலும் அனைத்து துறை மாணவா்களுக்கும் பயனளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படும்.
