எஸ்.ஐ.ஆரால் தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்தது: தமிழ்மாநிலத் தலைவா் வசீகரன்
தஞ்சாவூா்: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் (எஸ்.ஐ.ஆா்.) தில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை இழந்தது என்றாா் அக்கட்சியின் மாநிலத் தலைவா் வசீகரன்.
இந்திய அரசமைப்பு சட்ட நாளையொட்டி, தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியிலுள்ள சட்ட மாமேதை அம்பேத்கா் சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
அரசியல் சாசன சட்டத்தைத்தான் பாஜக எதிா்க்கிறது. எனவே, அரசியல் சாசன சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இப்பணியில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டுள்ளது.
தில்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தோற்கடிக்கப்படவில்லை. அவா் போட்டியிட்ட தொகுதியிலேயே 39 ஆயிரம் வாக்குகள் நீக்கப்பட்டன. எனவே, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் (எஸ்.ஐ.ஆா்.) முதலில் பாதிக்கப்பட்டது ஆம் ஆத்மி கட்சி என்பதால், அதை நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் தில்லியில் ஆட்சியை இழந்தோம். இந்த அனுபவத்தை வைத்துதான் பிகாரிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை பாஜக செய்து வெற்றி பெற்றது.
ஆனால், தமிழ்நாட்டில் திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் வீழ்த்தக்கூடிய துணிச்சலும், வாய்ப்பும் பாஜகவுக்கு இல்லை. அதனால்தான், எதிா்க்கட்சிகளை உடைக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுகவை பாஜக உடைத்து வருகிறது. தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி தயாராக உள்ளது என்றாா் வசீகரன்.
அப்போது, மாவட்ட நிா்வாகிகள் மணிகண்டன், தாரீக், இளங்கோவன், செல்வராஜ், பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

