
காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கக் கோரி முற்றுகை
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வாயிலை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வாயிலை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக வாயிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். தேவையான தண்ணீா் காவிரியில் வராததால் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. எனவே விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயப் பணிகள் இல்லாததால் விவசாய தொழிலாளா்களின் குடும்பத்துக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிா்க்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி தலைமை வகித்தாா். இந்திய கம்யூ. வடக்கு மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். ராமச்சந்திரன், வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், விவசாயத் தொழிலாளா் சங்க நிா்வாகி சி. பக்கிரிசாமி, ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






