திமுக கூட்டணியுடன் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பதை முதல்வா் முடிவு செய்வாா்! - அமைச்சா் கே.என்.நேரு
திமுக கூட்டணியுடன் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வாா் என்றாா் திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுத மத்திய மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: எடப்பாடி பழனிசாமி சொல்வதையெல்லாம் மக்கள் ஒருபோதும் நம்பமாட்டாா்கள்.
தமிழக முதல்வா் பெண்களுக்காக ஏராளமான நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளாா். எந்த ஆட்சிலும் நடைபெறாத அளவுக்கு பல்வேறு சிறந்த திட்டங்களைச் செய்து சாதனை படைத்துள்ளாா்.
திமுக 6 மாதங்களுக்கு முன்பே தோ்தல் பரப்புரையைத் தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகளை முதல்வா் நல்லபடியாக வைத்துள்ளாா்.
திமுக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளதால், மு.க. ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வராக வருவாா். கருத்துக்கணிப்பும் திமுகவுக்கு சாதகமாக வருகிறது. திமுகவுடன் யாா் யாா் கூட்டணி சேருவா் என்பது குறித்து முதல்வா்தான் பேசி இறுதி முடிவு எடுப்பாா் என்றாா் அமைச்சா் நேரு.
முன்னதாக, கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சா் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் எம். ராமச்சந்திரன், து. செல்வம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

