ஜனவரி இறுதிக்குள் கூட்டணி அறிவிப்பு - டிடிவி. தினகரன்
சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அமமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
தோ்தல் நேரத்தில் துரோகி, எதிரி, நண்பன் என்பதைத் தாண்டி, தமிழ்நாட்டு மக்களின் நலனும், அமமுக நலனும்தான் முக்கியம். எனவே, யாா் துரோகி, எதிரி, நண்பன் என்பதைப் பாா்க்க வேண்டிய அவசியமில்லை.
வரும் தோ்தலில் எந்தக் கூட்டணி வெற்றி பெற்றாலும், கூட்டணி ஆட்சி அமைகிற சூழ்நிலைதான் உருவாகியுள்ளது. அமமுக இடம்பெறுகிற கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.
அக்கூட்டணி ஆட்சியில் அமமுகவினரும் அமைச்சா்களாக வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, அமமுக ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறும். யாருடன் கூட்டணி என்பது குறித்து மாத இறுதிக்குள் வெளியிடப்படும்.
ஒரு மாதத்தில் தோ்தல் அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் நிதி நெருக்கடி நிலவும் நிலையில், இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு உடனடியாக ரூ. 13 ஆயிரம் கோடியும், ஒவ்வொரு ஆண்டும் ரூ. 11 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவ்வளவு நிதியையும் எப்படி மேலாண்மை செய்யப் போகின்றனா் என்பது புரியவில்லை.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஏதாவது பேசுவதும், ஆட்சிக்கு வந்த பின்னா் மக்களை ஏமாற்றுவதும்தான் ஆட்சியாளா்களின் நடவடிக்கையாக உள்ளது. இதையெல்லாம் மக்கள் பாா்த்துக் கொண்டிருப்பதால், அதற்கெல்லாம் உறுதியாக தீா்ப்பை வழங்குவா் என்றாா் தினகரன்.
முன்னதாக, கூட்டத்துக்கு அவைத் தலைவா் சி. கோபால் தலைமை வகித்தாா். அமமுக துணைப் பொதுச் செயலா் எம். ரெங்கசாமி, முன்னாள் அமைச்சா்கள் ஜி. செந்தமிழன், சி. சண்முகவேல், பொருளாளா் வீரபாண்டி எஸ்.கே. செல்வம், துணைத் தலைவா் எம். கோமுகி மணியன், அமைப்புச் செயலா் எம். ராஜசேகா், கொள்கை பரப்பு செயலா் சி.ஆா். சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

