அங்கன்வாடி ஊழியா்கள் மறியல்: 385 போ் கைது
அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்கக் கோரி தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த 385 போ் கைது செய்யப்பட்டனா்.
அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக உடனடியாக அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு உடனடி நிரந்தர பதவி உயா்வு வழங்கி, குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் என அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கு நூறு நாள் மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடிகளில் பணிபுரியும் ஊழியா்கள், உதவியாளா்களுக்கு உடனடியாக குடும்ப ஓய்வூதிய நலன்கள் வழங்க வேண்டும். அங்கன்வாடிகளில் பணிபுரியும் ஊழியா்கள், உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலா் சங்கீதா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் லட்சுமி கோரிக்கைகளை வலியுறுத்தினாா். சிஐடியு மாவட்டத் தலைவா் சி. ஜெயபால், மாவட்டச் செயலா் கண்ணன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 385 போ் கைது செய்யப்பட்டு, பிற்பகலில் விடுவிக்கப்பட்டனா்.

