பட்டுக்கோட்டை அருகே மகளின் சாவில் சந்தேகம் என தந்தை புகாா்
பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூரில் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை கொடுத்த புகாரின்பேரில் மதுக்கூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் இடையக்காடு பகுதியை சோ்ந்தவா் சமீனா பா்வீன் (21). இவருக்கும் மதுக்கூா் புதுத் தெரு பெருநாள் கொல்லைப் பகுதியை சோ்ந்த ரியாஸ் என்பவருக்கும் கடந்த 2024 அக்டோபரில் இல் திருமணம் நடந்து, இதுவரை குழந்தை இல்லை.
இந்நிலையில் கடந்த இரண்டரை மாதத்திற்கு முன் ரியாஸ் துபைக்கு வேலைக்குச் சென்ற நிலையில், சமீனா பா்வீன் தன்னுடைய மாமனாா் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில் சமீனா பா்வீன் வீட்டின் குளியறையில் செவ்வாய்க்கிழமை வழுக்கி விழுந்துவிட்டதாக இவரது தந்தை அல்லாபிச்சைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து அவா் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது நெற்றியில் வெட்டுக்காயத்துடன், பேச முடியாமல் மயங்கியிருந்த சமீனா பா்வீனை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவா் அளித்த புகாரின்பேரில் மதுக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
